பொன் மலைமே லாகாயம் போவார்க்குப் பூமியுள்ளோ
ரென்னவே நாதாந்த மெய்தினரை – யென்னருகே
வாவென்று பாற்கடலில் வாழரியை மண்டூகங்
கூவுந் தகைமைய தொக் கும்.
(இ-ள்.) பொன் மலைமேல் ஆகாயம் போவார்க்கு பூமி உள்ளோர் என்னவே – பொன்மலை முடிமேல் ஆகாச கமனம் பண்ணுவோர்க்கு இந்நிலத்தின் கண் உள்ளார் மிகவும் தாழ்ச்சியானது போல் ஞானிகட்கும் பிரபஞ்சிகட்கும் உயர்ச்சி தாழ்ச்சி இருப்பவும்,
நாதாந்தம் எய்தினரை என் அருகே வா என்று பாற் கடலில் வாழ் அரியை மண்டூகம் கூவும் தகைமையது ஒக்கும்- நாததத்துவத்தின் முடிவாயிருந்த திருவளை அடைந்த ஞானிகளைப் பஞ்சபூதகாரியந் தானாகிய தேகந்தானாகி இந்திரியவழி நுழைந்து செல்லும் பிரபஞ்சி ஒருவன் என் மனைக்கு நீர் வருக என்றழைத்தல், பாற்கடல் நாப்பண் அரவணையில் பள்ளி கொள்ளாநின்ற பெருமாளைப் பார்த்து, ஓர் தவளை நீரும் இக்கடல்மிசை மிதந்து துயில்கின்றீர் , யானும் இக்கடல் மிசைமிதந்து துயில்கின்றேன், உமக்கும் அரியென்று பெயர், எனக்கும் அரியென்று பெயர், ஆகலின், எனதருகே நீர் வருக என்றழைக்கும் முறைமையது ஒக்கும்
(வி-ரை.) பொன்மலை முடியை நாதாந்தத்திற்கும், அம்மலைமுடிமேல் தோன்றும் ஆகாயத்தை இந்நாதாந்தத்தில் தோன்றும் திருவருளுக்கும், அவ்வாகாயத்தில் கமனம் பண்ணுவோனை இத்திருவருளையும் கடந்து செல்லும் ஞானிகள் அறிவிற்கும் உவமித்துக் கூறியவாறு காண்க.
ஞானிகள் தத்துவங்கட்கு எல்லாம் முடிவாய் நின்ற பரிபூரணத்தை அடைந்தவர், பிரபஞ்சிகள் தத்துவங்கட்கு எல்லாம் அடியாயுள்ள பஞ்சபூதகாரியம் தானாயுள்ள தேகத்தை அடைந்தவர் ஆகலின், “பொன்மலைமே லாகாயம் போவார்க்குப் பூமியு ளோ ரென்னவே” என்று அங்ஙனம் உவமை கூறினார்.
ஞானிகளது மகிமையை அறியாததால், அவரும் உலகத்தின் கண் இருக்கின்றார், யானும் உலகத்தின்கண் இருக்கின்றேன், அவரும் மனிதர், யானும் மனிதனென்று கருதி அழைத்தான் ஆகலின், “பாற்கடலின் வாழரியை மண்டூகங்கூவுந் தகைமைய தொக்கும் ” என்று இங்ஙனம் உவமை கூறினார்.
இத்திருவெண்பாவால் ஞானிகட்கும் அஞ்ஞானிகட்குந் தாரதம்மியமும், அவரை இவரெண்ணாமல் அழைப்பதும், இங்ஙனம் என்று அறிவித்தவாறு காண்க.
ஆயின், பத்தியோடு மனமொழி மெய்களால் அவரை வணங்கி என் மனைக்குத் தேவரீர் எழுந்தருளுக என்று ஒருவன் அழைத்தால் செல்வரோ எனின், மேற் கூறுகின்றார்.