ஒழுவிலொடுக்கம்

186. கருமந் திரிவிதத்திற் கட்டவிழுங் கால

கருமந் திரிவிதத்திற் கட்டவிழுங் கால
மரவுந் தவளையும் போலாகி – யிருதலையிற்
கொள்ளியெறும் பாயுடம்பே கூற்றாகித் தோற்றுமெனி
னுள்ளினரு மூருமென்னா கும்.

(இ-ள்.) கருமம் திரிவிதத்தில் கட்டு அவிழும் காலம் அரவும் தவளையும் போல் ஆகி இருதலையில் கொள்ளி எறும்பு ஆய் உடம்பே கூற்று ஆகித் தோற்றும் எனில் – ஞானாசாரியர் கிருபாநோக்கத்தானும், கர சரண பரிசத்தானும், திருவாக்கானும், அவரது ஆணவம் மாயை கன்மங்களாகிய கட்டு விடுதலையாகாநின்ற காலம் ஆகலின், தம் உடம்பே பாம்புந் தாம் ஓர் தவளையும் போலாகி, அவ்வுடம்பே இரு தலையும் எரி சூழ்ந்த கொள்ளியாகி, தாம் அக் கொள்ளிக் குழலுட் சுழலும் எறும்பாகி, அவ்வுடம்பே தம்மைப் பறித்துச் செல்லுங் கூற்றாகித் தோற்றும் எனின்,

உள்ளினரும் ஊரும் என் ஆகும்- இங்ஙனம் பகையாய்த் தோற்றும் உடம்பிற்கு உபசாரஞ் செய்யக் கருதினோரும், அவர் அழைத்துச் செல்லும் ஊரும் என்ன பயனைத் தரும் அவர்க்கும்?

(வி-ரை.) பாம்பு தவளையைப் பற்றி நிற்றல்போல் உடம்பு அவரைப் பற்றி நிற்றலானும், நெருப்பு அவியுமளவும் குழற்கண் வருந்திச் சுழலும் எறும்பு போல் ஊழ்வினை அறுமளவும் உடம்புள் வருந்தி இருத்தலானும், கூற்று உயிரைப் பிணித்துச் சேறல்போல் அவரைப் பற்றிநின்று பிச்சையா திக்குச் செல்லப் பண்ணுதலானும், அங்ஙனம் உவமை கூறினார்.

ஒருவன் தனக்குப் பகையாயினார் மேல் வெறுப்புண்டாவது மன்றி, அப் பகைவர்க்கு இதஞ் செய்வார்மேலும் வெறுப்புண்டாவது போல், அவர்க்குப் பகையாகிய உடம்பின்மேல் வெறுப்புண்டாவதும் அன்றி, அவ்வுடம்பிறகு இதஞ் செய்வார் மேலும் வெறுப்புண்டாம் ஆகலின், “உள்ளினருமூரு மென்னாகும் ” என்றார்.

“திரிவிதத்திற் கட்டவிழும்” என்றமையால், இரண்டு மலமும் வருவிக்கப்பட்டன. ஞானாசாரியரை அடைந்தோரும் ஓரூரின் கண் ஒருவன் செய்யும் உபசாரத்தை அங்கீகரிக்க இல்லையோ? இவர் என்னை அங்ஙனம் அங்கீகரியா திருப்பது எனின், மேற் கூறுகின்றார்.