மலட்டுமக னீங்கி வரக்கண்ட தாய்தா
லலத்தி மகிழு மதுபோ – லுலப்பிலாக்
காலங் கழிந்ததையுங் காணாத்தைக் கண்டகளிப்
பாலு மழுது சிரிப் பார்.
(இ-ள்.) மலட்டு மகன் நீங்கி வரக்கண்ட தாய் தால் அலத்தி மகிழும் அதுபோல் –நெடுநாள் மலடிருந்து பின்னர் அரிதாய்ப்பெற்ற புதல்வன் தன் மனைவிட்டு நீங்கி அயல் மனையிற் சென்று மீண்டு வர எதிர்கண்ட தாய் சென்று எடுத்து மார்போடு அணைத்து முன்னர் அவனைப் பெறாத காலத்தையும் இப்போது அவனைப் பெற்றுக் கண்ட காட்சியையும் நினைந்து தாலாட்டுத்தலோடு அழுது அவ்வழுகையோடும் சிரிக்கும்,அது போல
உலப்பு இலாக் காலம் கழிந்ததையும் காணாத்தைக் கண்ட களிப்பாலும் அழுது சிரிப்பார் -திருவருளைப் பெறாது அளவிறந்தகாலம் பிறவியில் வீணாளாய்க் கழிந்ததைக் கருதியவதனாலும், அக் காலங்களுள் ஓர் காலமாயினுங் காணாத அத்திருவருளை இப்போது கண்ட களிப்பாலும், அவ்வருளைத் தோத்திரம் பண்ணலோடு அழுது அவ்வழுகையோடுஞ் சிரிப்பார் திருவருள் மேலீட்டை அடையப்பெற்றோர்.
(வி-ரை.) “தாலலத்தி” என்று உவமை கூறினமையால் அருளைத் தோத்திரம் பண்ணுதல் வருவிக்கப்பட்டது. அருள் தம்மிடத்துத் தோற்றலான் அதனை மகவாக உவமித்துக் கூறினார். தால் – தாலாட்டுதல், அலத்தல் – அழுதல்,
இத்திருவெண்பாவால் கழிந்தநாட்கிரங்குதல் கூறியவாறு காண்க.
சுகாதீதமுத்தியைப் பெறாது, இங்ஙனந் திருவருள் மேலீட்டைப் பெற்றோர்க்குப் பிறப்பு உண்டாகாதோ? எனின் மேற் கூறுகின்றார்.