ஒழுவிலொடுக்கம்

199. குறும்பாட்டும் புன்சிரிப்புங் கூர்த்திமையா நோக்கும்

குறும்பாட்டும் புன்சிரிப்புங் கூர்த்திமையா நோக்கும்
வெறும்போகஞ் சாய்ந்து விழினு – மறந்த
திகைப்பும் விதிர்ப்புந் திமிர்ப்பும் விறைப்பு
முகைப்புந் தெளிந்தறிதலும்.

(இ-ள்.) குறும்பாட்டும் புன்சிரிப்பும் கூர்ந்து இமையா நோக்கும் – தாம் அறிந்த பாட்டுகளுள் சில பாட்டான் அருளைத் தோத்திரம் பண்ணுவதாய குறும்பாட்டும், ஆநந்த மகிழ்ச்சியால் தோன்றும் புன்சிரிப்பும், உட்புறனும் அவ்வாநந்த பூரணத்தை நுண்ணிதாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதாய இமையா நாட்டமும்

வெறும் போகம் சாய்ந்து விழினும் மறந்த திகைப்பும் விதிர்ப்பும் திமிர்ப்பும் விறைப்பும் உகைப்பும் தெளிந்து அறிதலும் – தாம் ஒன்றையும் விழையாது இருப்பினும் தமது சந்நிதியில் பொய்ப்போகங்கள் மிகவுஞ் சாய்ந்து வந்து கிடப்பினும் இத்துன்பங்கள் ஈண்டு ஏன் வந்தன என்று அவற்றை சிறிதும் நினையாத திகைப்பும், அவற்றைக்கண்டபோது உடல் நடுக்குறுதலும், பஞ்சேந்திரி யங்கட்கு உரிய விடயங்கள் நேர்படின் அவ்விடயச்சுவை தோன்றாத திமிர்ப்பும், பூதம் பேய் புலி கரடி முதலிய வந்தகாலத்துக் கற்றூண்போலத் தேகம் அசைவற்றிருக்கும் விறைப்பும், ஆநந்தம் மிகவும் வந்து தாக்குதலான் எழுந்து குதித்தாடும் உகைப்பும், அங்ஙனம் ஆடிய ஆநந்த மேலீட்டால் தோன்றாது அவ்வாநந்த மேலீடு சிறிது நீங்கியபோது இப்போது யாம் என் செய்தோம் என்று தெளிந்தறிந்து கோடலும், ஆகிய இக்குணங்கள் எல்லாம் பரையோக நீங்கி ஆநந்தம் பெற்றோர்க்குத் தோன்றுவனவாம்.

(வி-ரை.) இங்ஙனம் அறிவும் துறவும் உடைய ஞானிகளைப் பத்தராய் உள்ளார் எல்லாரும் அன்னபானங் காய் பழம் ஆடை முதலிய கொடுவந்து வைத்து வணங்குவர் ஆகலின், “வெறும் போகஞ் சாய்ந்து விழினும் ” என்றார்.

வெறும்போகம் – பொய்ப்போகம். சாய்ந்தென்பது மிகுதி மேல் ஏறிற்று.

இத் திருவெண்பாவால் ஆநந்தம் பெற்றோர் குணம் அறிவித்தவாறு காண்க.

இங்கனம் பூரணாநந்தம் பெற்றோர்க்கு ஆடலும் பாட லும் உண்டாவது என்னை எனின, மேற்கூறுகின்றார்.