ஒழுவிலொடுக்கம்

202. செகஞ்சிரிக்கத் தாஞ்சிரித்துச் சீபேயென் றோட்டி

செகஞ்சிரிக்கத் தாஞ்சிரித்துச் சீபேயென் றோட்டி
லகம்புறங்கா டேச்சுக்குற் றற்றுத் – திகம்பரியாய்த்
தாநந்தம் பாடிவிண்ணிற் றட்டத் துணங்கையடித்
தாநந்தக் கூத்து நடிப் பார்.

(இ-ள்.) செகம் சிரிக்கத் தாம் சிரித்துச் சீபேய் என்று ஓட்டில் புறங்காடு அகம் ஏச்சுக் குற்றற்றுத் திகம் பரி ஆய் – உலக நடைதெரியாத பேயரென்று சகத்தோர் தம்மைப் பார்த்துச் சிரிப்ப, ஞான நெறி தெரியாத மலப்பேயரென்று தாமும் அவரைப்பார்த்துச் சிரித்து, புறந்திண்ணை பொதுச்சாவடிகளில் தாம் இருந்தவிடத்து அவர் வந்து சீ பேயரே போம் என்று ஓட்டினால் யாதொன்றும் கூறாது அவ்விடம் விட்டு நீங்கி, புறங்காட்டை நன்மனை போற் கண்டு, அசுத்தமென்னும் அருவருப்புச் சிறிதும் அற்றுத் திகம்பரிகளாய் அவ்விடத்திருந்து

தான் அந்தம் பாடி விண்ணில் தட்டத் துணங்கை அடித்து ஆனந்தக்கூத்து நடிப்பார் – தமது போதகாசமான இடத்துப் பாடிச்சிதாகாசவெளியில் பொருந்தி நின்று துணங்கைக் கூத்திற்கு உரித்தாம்படி கையடித்து ஆநந்த நடனம் பண்ணுவர் ,அவ்வாநந்த பூரண ராயினார்.

(வி-ரை.) உலகர்க்கு ஞானிகள் மாறுபாடாயிருத்தலானும், ஞானிகட்கு உலகர் மாறுபாடா யிருத்தலானும் “செகஞ் சிரிக்கத்தாஞ் சிரித்து” என்றார். உலகத்திற்கு ஞானம் பேய், ஞானத்திற்கு உலகம் பேய் என்னும் உலக வழக்கமும் அது. பிரபஞ்சமெல்லாம் ஆநந்த பூரணமாய்த் தோற்றலின் சுடுகாட்ட சுத்தம் அவர்க்குத் தோற்றாது என்பதறிக.

“தானந்தம்பாடி” என்றதனால் போதம் இறந்து நின்று பாடினார் என்பதும் “விண்ணிற்றட்ட நடிப்பர்” என்றதனால் பரிபூரணாநந்தம் மாறாது நடிப்பா ரென்பதும் காண்க.

இவையிரண்டு திருவெண்பாவானும் ஞானிகள் நிருவிகாரிகளாயிருந்தே ஆடுவர் பாடுவரென்று அறிவித்தவாறு காண்க. நீர் கூறியவாறே எல்லாவற்றையும் துறந்து, சிவவேடம் பூண்டுகொண்டு, தவங்களைச் செய்து, சிவாலயங்கடோறும் ஆடிப்பாடி அழுது சிரிக்கின்றோர் நிருவிகாரிகள் அலரோ எனின், மேற்கூறுகின்றார்.