ஒழுவிலொடுக்கம்

216. மூர்க்க னனாசாரி மூடனெனப் பண்டிதனாம்

மூர்க்க னனாசாரி மூடனெனப் பண்டிதனாம்
மேற்குலமா மாசார வித்ததெனப் – பார்க்கி
லளவைக் களவாகி யப்பாலா ஞானி
தெளிவைத் தெளியாத தென்.

(இ-ள்.) மூர்க்கன் அனாசாரி மூடன் எனப் பண்டிதன் ஆம் மேல் குலம் ஆம் ஆசார வித்து என –உலக நடை சமய நடைகளில் நிற்போர் ஞானிநடையைப் பார்த்து, தமது நடையோடு ஒவ்வாமையான் இவன் பிரட்டு நடையையுடைய மூர்க்கனெனவும், ஆசார ஈனனெனவும், ஒன்றும் அறியாத மூடனெனவுங் கூற, விவேகிகளாயினார் அவன் நடையைப்பார்த்து எல்லாவற்றையுந் தெளிந்த பண்டிதனாம் எனவும், மேலாய ஞான குலமாமெனவும், ஆசாரத்திற்கெல்லாம் ஓர் வித்தாமெனவுங் கூற,

பார்க்கில் அளவைக்கு அளவு ஆகி அப்பால் ஆம் ஞானி தெளிவைத் தெளியாதது என் அவன் நடையை விசாரிக்குமிடத்து, இவரால் இவ்வளவென்று அளவிடுதற்கு அளவிடுவதாய் இவ்வளவையுங் கடந்து அப்பாலுமாகிய அந்த ஞானியினது நடையினையும் தெளிவினையும் இவ்வளவென்று ஒருவராலும் அறியக்கூடா திருந்தது என்கொலோ?

(வி-ரை.) உலக நூல் சமய நூல்களை உணர்ந்தோர்கள் அந்நூல்களின் நடை இன்மையான் இகழ்ந்து கூறினார். ஞான நூலுணர்ந்தோர் ஞான நடை என்றறிந்து புகழ்ந்து கூறினாராகலின், “அளவைக்களவாகி” என்றும், இங்ஙனஞ் செய்வோமென்று செய்யாதவனிடத்தில் ஞான நடை இயல்பாய் நிகழ்தலின் ஞான நூலுணர்ச்சியால் புகழ்ந்து கூறினார், அளவையுங் கடந்து நின்றானாகலின் மூவளவைக்கும் பொதுப்பட” அப்பாலா ஞானிதெளி வைத் தெளியாததென்” என்றுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் ஞானியினது நடையுந் தெளிவும் யாவராலும் அறிந்து அளவிடக்கூடாதென்று அறிவித்தவாறு காண்க. சுகாதீதத்தில் நிற்போர்க்கு அந் நடைகள் இலவாயினும் அருள் தரிசன முதலியவற்றில் நிற்போர்க்கு அந் நடைகள் இலவாயின் அது பிரட்டன்றோ எனின், மேற் கூறுகின்றார்.