ஒழுவிலொடுக்கம்

226. மோனிகளைப்பார்த்திமையாமோகமும்வெண்டிங்கண்

மோனிகளைப்பார்த்திமையாமோகமும்வெண்டிங்கண்
மேனி யழகெழுதா மேற்பத்தி – யான
பதுமா தனன்கண்ணும் பானுவும் போற் றானா
யெதிராகுஞ் சொப்பனத்திலும்.

(இ-ள்) மோனிகளை பார்த்து இமையாப் மோகமும் வெண் திங்கள் மேனி அழகு எழுதா –அந்த ஞானிகள் தம்மைப்போல் சுகாதீத முத்தியைப் பெறும் பொருட்டுப் புறத்து நின்ற போதத்தை உள்ளடக்கி, இதனைக் கெடுப்பதே விரதமாய்க் கொண்ட மௌனிகளை இமையா நாட்டத்தோடும் பார்த்து இவர்மேல் வைத்த மோகமும், உத்தூளனத்தால் வெண்டிங்கள் போலும் விளங்கா நின்ற அழகெழுதக்கூடாத அவரது திருமேனியும்

மேல் பத்தி ஆன பதுமாதனன் கண்ணும் பானுவும் போல் தான் ஆய் எதிர் ஆகும் சொப்பனத்திலும் – பிரமனது நான்கு முகங்களினும் மேன்மை பெறு பந்திபோல விளங்குவதான எண்கண்களும், அக் கண்கட்கு  எதிர் தோன்றும் பானுவும் போல், யான் கருதாதிருப்பினும், அவை தாமாய் வந்து, எனதுளக் கண்ணிற்கும் முகக்கண்ணிற்கும் எதிரே விளங்குவதாம் சொப்பனத்திலும், சாக்கிரத்தினும்.

(வி-ரை.) சுகாதீத முத்தியை அடைந்த ஞானிகட்கு ஞானசாதகரைக் கண்டால் பாசங்களை எல்லாம் கடந்து இவ்வளவு வந்தாரென்று, அவர் மேற்சந்தோஷமும் பிறக்கு மாகலின், “மோனிகளைப்பார்த்திமையாமோகமும்” என்றார். ”யான் பெற்றபேறு பெறுக இவ்வையக” மென்பதும் அது, பதுமாதனன் இமையா நாட்டத்தையும், அதற்கெதிர் தோன்றும் பானுவையும், உவமை கூறினமையான், அவர் மேல் வைத்த மோகத்தையும், அவரது திருமேனியையும் தமதுளம் மறவாதென்பதாயிற்று. எனதெனும் பெயர் எஞ்சி நின்றது.

சொப்பனத்திலும் என்ற உம்மையால் சாக்கிரத்தும் என்று வருவிக்கப்பட்டது.

இத்திருவெண்பாவால் எமக்கும் இங்ஙனம் இருக்கும் என்று ஞானிகளருமை அறிவித்தவாறு காண்க.