ஒழுவிலொடுக்கம்

233. எல்லாச் சமயங்க ளுந்து திக்கு மில்லறத்தி

எல்லாச் சமயங்க ளுந்து திக்கு மில்லறத்தி
னில்லாம னீத்தாரென் னீத்தாலென் – புல்லறிவைத்
தீரத் தெளிந்து சிவத்தோடும் பற்றற்றா
ராகிற் பிறப்பறுக்க லாம்.

(இ-ள்.) எல்லாச் சமயங்களும் துதிக்கும் இல் அறத்தில் நில்லாமல் நீத்தார் என் நீத்தால் என்–சமயங்களெல்லாம் இது நன்று நன்று என்று புகழ்ந்து கூறாநின்ற இவ்வாழ்க்கையில் நில்லாமல், இதனைத் துறந்தார் இத்துறவிற்குத் தகுமென மற்றியாது துறந்தாலும் என்னை, இத்துறவினாற் பிறப்பறுக்கக் கூடுமோ?

புல் அறிவைத் தீரத்தெளிந்து சிவத்தோடும் பற்று அற்றார் ஆகில் பிறப்பு அறுக்கல் ஆம்- தற்போதங் கருவிப்போதங்களாய புல்லறிவை, ஞானகுருவால் நன்றாம் விசாரித்தறிந்து அதனைக் கெடுத்து சிவத்தோடும் இரன்டறக்கலந்து, அச்சிவத்தோடுங் கலந்திருக்கின்றோம் என்னும் வாசனைப்பற்றும் அற்றார் எனின் அவர்க்கே பிறப்பறுக்கலாம், மற்றையர்க்குக் கூடாது.

(வி-ரை.) சமய நூல்களெல்லாம் இல்லறத்தையே மேம்பாடாகக் கூறுதலின், “எல்லாச் சமயங்களும் துதிக்கு மில்லறத்தை” என்றார். ”அறனெனப் பட்டதேயில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று” என்பதும் அது.

“நீத்தாரென்னீத்தாலென்” என்றது அவ்வில்வாழ்க்கையைத் துறந்த பின்னரும், உடலொறுத்தல், ஊண்வெறுத்தல், உடை துறத்தல், ஊரொடுக்கந் துறத்தல் முதலியன துறந்து நிற்றலெனக் கொள்க.

“புல்லறிவைத் தீரத்தெளிந்து சிவத்தோடும் பற்றற் றாராகிற் பிறப்பறுக்கலாம்” என்றமையால், இங்ஙனந் தெளிந்து பற்றறுதி உடையார் இல்லறந் துறவறங்களில் நின்றாலும் பிறப்பறுப்பார் என்பதும், இவையில்லார் யாது துறந்தாராயினும் பிறப்பறார் என்பதுங் காண்க.

 

தற்போதங் கருவிப்போதம் இரண்டும் புல்லறிவு ஆகலின், பொதுப்படப் “புல்லறிவு” என்றார். தீரத்தெளிதல் அவற்றை உள்ளபடி அறிந்து கெடுத்தல்,