மாயாபோ கத்தரசாய் வாழ்ந்தாலு மாமணிபோற்
றோயா தவரே துறந்தோர்க – டோய்வாரேற்
சேரும் விதை போலத் தீர்ந்தவிடத்தே திரும்பும்
வேரொன் றதுவே வினை.
(இ-ள்.) மாயா போகத்து அரசு ஆய் வாழ்ந்தாலும் மாமணிபோல் தோயா தவரே துறந்தோர்கள் — மாயா போகத்துக்கெல்லாம் அரசராகி அப்போகங்களை அநுபவித்து வாழ்ந்தார் ஆயினும், மகத்தாகிய மாணிக்க மணி ஒன்றோடும் தோயாது நின்றது போல், அவற்றோடும் தோயாது நின்றவரே துறந்தோரென்று சொல்லப்படுவர்;
தோய்வாரேல் சேரும் விதைபோலத் தீர்ந்த இடத்தே திரும்பும் வேர் ஒன்று அதுவே வினை-படிகமணிபோல் யாதொன்றோடாயினும் தோய்வாரெனின், நிலத்துச் சேரும் வித்துப்போல உடல் இறந்த காலையில் நின்று நீங்கிய பற்றின் கண் மீட்டும் திரும்பும் ஓர் மூலமும் அப்பற்றுடைமையே, வினையென்பதும் அப்பற்றுடைமையேயாம்.
(வி-ரை.) மாமணி தன்னை அடுத்த வன்னங்களைக் கவராது, தனது பிரகாசத்தை அவற்றின் மேல் வீசி நின்றாற்போல, யாது விடங்கள் வந்தடுப்பினும் அதில் தோயாது, தனது ஞானப்பிரகாசத்தை அவற்றின் மேல் வீசி நிற்றலான் “மாமணிபோற்றோயாதவர்’ என்றும்; உடம்பிற்குப் புறம்பாய பற்றுக்களை ஒழித்து, அவ்வுடம்பாய் நின்றோரைத் துறந்தோர்கள் என்று சொல்வதுபோல உயிர்க்குப் புறம்பாய கருவிகள் முப்பத்தாறையும் ஒழித்து அறிவாய் “நின்றோரைத் துறந்தோர்கள்” என்றார்,
நிலத்திற் சேரும் வித்துப்போல் உடல் இறந்தகாலை நின்ற பற்றின் கண் மீட்டும் உயிர்வந்து அடைந்து உற்பத்தியாகலின், “சேரும் விதைபோல்” என்றும், உடல்நீங்கும் காலை உயிர்க்கு எந்த வாசனையிருந்தது அந்த வாசனையோடும் பிறப்பின் கண்மீள்கலான், “தீர்ந்த விடத்தே திரும்பும் வேர்” என்றும், பற்றுள்ள விடத்து வினையும் உளவாகலின் “அதுவே வினை” என்றுங் கூறினார்.
“அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து‘ என்பதும் அது, “அதுவே” என்பதனைப் பற்றுடைமை எனக்கொள்க.
இத்திருவெண்பாவால் எந்நிலையில் நின்றாலும், அதனுட் பற்றறுதி உடையோர்க்கே வீடென்று அறிவித்தவாறு காண்க. விடயங்களை அநுபவிப்பினும் அவற்றுட்கூடாரென்றீர் இதென்னை எனின், மேற்கூறுகின்றார்.