ஒழுவிலொடுக்கம்

21. முலையுண்ணி நீருண்ணு மோட்டெருமை மூடர்

முலையுண்ணி நீருண்ணு மோட்டெருமை மூடர்
சலமின்றிச் சந்துரைப்பார் தர்க்கர் – பலதாரை
வட்டிலே போலுமவர் மாயோக வாசகத்தைக்
கிட்டி னரகங் கிடீர்.

(இ-ள்.) முலை உண்ணி நீர் உண்ணும் மோட்டெருமை மூடர் சலம் இன்றிச் சந்து உரைப்பார் தர்க்கர்- பசுவினது விம்மிச்சுரந்த முலையிற்கடித்த உண்ணிபோலும் தடாகத்தில் நீர் அருந்தும் முதிர்ந்த எருமைபோலும், அறிவேதும் இன்றிய மூடர்போலும், நீர் இன்றிச் சந்தனம் உறைப்பார்போலும் ஆவார் தருக்கராயினோர்;

பல தாரை வட்டிலே போலும் அவர் மாயோக வாசகத்தைக் கிட்டின் நரகம் கிடீர் – பல்தொளை வட்டிலைப் போலும் பலப்படக் கூறுகின்ற அவரது மாயைக் கூட்டாவாகிய மொழிகளைக் கேட்பினும் நிரயம் என்று அறிவீர்.

(வி-ரை.) முலை உண்ணி பால் உண்ண அறியாது உதிரம் அருந்தல்போல், நூலாற் சிவாநந்தப்பேறு அடையாது இம்மைப் பயன் கோடலின், முலை உண்ணி என்றும், தடாகத்தில் தன் தாகந்தீர்க்கும் நீர் அருந்தாது அதனுள் வீழ்ந்து சேறாக்கிச்செல்லும் எருமைபோல், ஞானிகள் பாற் செல்லினும் அவர் கூறும் ஞானமொழிகளைக் கொள்ளாது தருக்கமாடி அவர் சித்தத்தைக் கலக்கிச் சேறலின், எருமை என்றும், மூடர் யாவர் ஏது நன்கு கூறினும் தாம் பிடித்த பிடி விடாது நிற்றல் போல், தீதாயினும் தருக்க வலியால் தாம் பிடித்த பிடியை முற்றுஞ் சாதித்தலின். மூடர் என்றும், சலம் இன்றிச் சந்துறைப்பார்க்குக் கை வருத்தமே அன்றிப் பயன் இன்றாவது போல், இவர் பலரோடுந் தருக்கமாடலான் வருதல் வாய்வருத்தமே அன்றிப் பயன் வேறு இன்றாகலின், “சலம் இன்றிச் சந்துறைப்பார்” என்றும்,

பலதாரை வட்டிலின் நீர் தாரைகள் தோறுஞ் சேறல் போல் ஓர்நெறி கூறுங்கால் அதனை முற்றுப்பெறக்கூறாது பல்நெறியாய் மலைவுபெறக் கூறலின், “பலதாரை வட்டில்” என்றும், திருவருட்போதம் அன்றி மாயாபோதத்தால் கூறலின், “மாயோக வாசகம்” என்றுங் கூறினார்.

இதனால் கல்வி உடையோரேனும் பிரபஞ்சிகளினும் கேடென்பது ஆயிற்று. கல்வி பொருள் என்னும் இரண்டு செல்வங்களும் நல்லோர் பால்வரின் நன்மையும் தீயோர் பால்வரின் தீமையும் மேன் மேல் வளர்தலின், இவர் தீயர் என்பது ஆயிற்று.

இவரது மொழிகளை உண்மையாகக் கொள்வோர்க்கும் தீதுவரும் ஆகலின், “கிட்டின ரகம்” என்றார்.

இத்திருவெண்பாவால் தருக்கவாதிகள் துர்க்குணமும் அவரது மொழிகளைக் கேட்கல் ஆகாது என்பதும் அறிவித்தவாறு காண்க.