போதப் புரவி புருட னதிலைந்து
வீதிப் பவனி விறிசாகும் – போதப்
புரவியரு ளேறினாற் போக்குவர வற்ற
பரமசுக மாங்காணப் பா.
(இ-ள்.) போதப் புரவி புருடன் அதில் ஐந்து வீதி பவனி விறிசு ஆகும் – போதமாகிய அரையன் புருடனாகிய புரவிமேல் ஏறிக்கொண்டு பஞ்சேந்திரிய வீதிகளில் விடயங்களாகிய காட்சிகளைக் கண்டு கொண்டு சுழல்விறிசு போலப் பவனி செல்வதாகும்
போதப் புரவி அருள் ஏறினால் போக்கு வரவு அற்ற பரமசுகம் ஆம் காண் அப்பா – போதமாகிய புரவிமேல் அருளாகிய அரையன் ஏறினால் ,அப்போது போக்குவரவு அற்று நின்ற மௌனானந்தம் உண்டாம். இதனை மாணாக்கனே நீ அறிதி.
(வி-ரை. போதம் புருடனோடுங்கூடிப் பஞ்சேந்திரிய வழிச்சென்று விடயங்களைப்பற்றும், அங்ஙனம் பற்றாது அவற்றை நீங்கி அப்போதத்தை உள்ளே அடக்கித் திருவருளை நாடவே, இவ்வருள் அப்போதத்தைக் கீழ்ப்படுத்தித் தான் மேலீடாய்ப் பிரகாசிக்கும், அப்போது ஆந்தோதயம் உண்டாம். ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.
போத விடயாநந்தம் பெறுதற்கு எதுவாய் நின்றது புருடன் ஆகலின், இப் புருடனைப் புரவியாக்கினார்.
சொரூபாநந்தம் பெறுதற்கு எதுவாய அருளைப் போத முன்னிட்டுக்கொண்டு சேறலின், இப்போதத்தைப் புரவியாக்கினார்.
இந்த நாட்டம் வைத்தால் அந்த நாட்டம் மறந்து சுழலும், அந்த நாட்டம் வைத்தால் இந்த நாட்டம் மறந்து அசைவற்றிருப்பதுங் காண்க
ஒருவன் அட்டாவதானம் செய்தல் முதலியன இப்புருடனது வேகமெனக் கொள்க.
இதற்கு உதாரணம்,
”ஐவகையா லுறு பயன்க ணுகரவருங் கால
மது புருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்”.
என்னும் சிவப்பிரகாசத்தானும் மற்றும் வருவனவற்றாற் காண்க.
அறிவும் ஆநந்தமும் பெறுதற்கு உபாயங் கூறினீர், இனித் துறவினது இலக்கணம் யாது எனின், மேற் கூறுகின்றார்.