தலைமேல் வைத்து என்பது ஆசிரியர் தம் ஆசாரியராகிய பிள்ளையார் திருவடித்தீக்கை செய்யத் தாம் பெற்றமை குறித்தது காண்க. அஃதேல், வைக்கப்பட்டு எனச் செயப்பாட்டு வினை யெச்சத்தானிருத்தற்பாலதன்றோ வெனின், ஆசிரியர்க்கு அத்திருவடிக் கண்ணேயுள்ள பிரியத்தொடர்ச்சியின் பெருமை தோன்ற இங்ஙனம் நின்று அங்ஙனங் குறித்ததென்க.
இதற்கு இவ்வாறன்றித் தலைமேற் பாவனையான் வைத்தெனக் குறித்ததென்று கூறுவாரும் உளராலோவெனின், அவ்வாறு கூறிற் பிள்ளையார் இந்நூலாசிரியர்க்கு ஞானாசாரியரென்பதும் இவர் ஞானதீக்கை யுடையாரென்பதும் விளங்குதலின்றி மற்றையாசிரியர் போல் எடுத்த நூலினிது முடிதற் பொருட்டுப் பாவனையான் வழிபடு கடவுட் பழிச்சினரென்று இலேசிற் கருதப்படுமாகலின் அங்கனங் கூறன் மரபு அன்றென்க.
தலையில் வைத்து என்னாது தலைமேல் வைத்து என்றமையான், மறைமுடிக்கண்ணே வயங்காநின்ற அச்செல்வத் திருவடியின் சீர்மை தோன்றிற்றென்க.