ஒழுவிலொடுக்கம்

36. கன்னிக் கதலிதனை நார்கழிப்பான் கண்போலத்

கன்னிக் கதலிதனை நார்கழிப்பான் கண்போலத்
தன்னையறி யாவறிவே தான் மீளச் – சொன்னாலு
நாவென்ற நாவேபோ னானென்ற சொல்லளவே
யாமன்றித் தானெ திரா கா.

(இ-ள்.) கன்னிக் கதலிதனை நார் கழிப்பான் கண் போலத் தன்னை அறியா அறிவே தான் மீளச் சொன்னாலும்- ஈனாவாழையினது மட்டைநார் கழிக்கத் தொடங்கினோன் கண் அம்மட்டை உளது உளதென்று சுட்டிப்பார்க் குந்தோறும் அவனது கை மட்டைகளை எல்லாம் கழித்துச் சென்று அதனுள் இருந்த குருத்தையும் விரித்து விடுத்த போது ஆண்டு முன்போற் சுட்டுதற்கு வேறொன்றும் இன்றிச்சும்மா இருந்த அக்கண்போலும், ஆசாரியன் விவேகத்தால் முப்பத்தாறு கருவிகளையும் விடுவிக்கத் தான் கடந்து சென்று அவற்றின் முடிவில் நின்ற அருளையும் பரையையும் கடந்து அதன் மேல் தோன்றும் ஆநந்தத்தையும் எதிரிடாது அதனுள் அதீதப்பட்டு இருந்த சிவயோகி தன்னை அறியா அறிவே ஆவன், அவ்வறிவாயிருந்தோன் மீட்டும் நீ நான் என்று பிரித்து அவ்வறிவு ஏற்றற்பொருட்டு மாணாக்கனுக்கு அறிவித்தான் எனினும்,

 நா என்ற நாவே போல் நான் என்ற சொல் அளவே ஆம் அன்றித்தான் எதிர் ஆகா-நாவானது தன் பெயரை நாவென்று கூறினும் அப் பெயர்க்கு உரியபொருள் வேறின்றித் தானாயிருந்த அந்நாவைப்போலும், நான் என்று சொல் மாத்திரமே ஆம் அன்றித் தானும் எதிரும் அவனுக்கு உண்டாகா.

(வி-ரை.) தன்னையறியா அறிவு சிவம், இதனைத் “தன்னை யறியாது வேறுண்டாய்த் தானறியா”தென்று முற்கூறிய பாட்டானுங் காண்க.

சிவயோகி தற்போதம் போய்ச் சிவமாய் இருத்தலின், தானென்பதும், அச் சிவப்பிரகாசத்திற் பிரபஞ்ச மறைத்தலின், பிறரென்பதும் அவனுக்கில்லை ஆகலின், “தானெதிராகா” என்றார்.

இத்திருவெண்பாவால் சிவயோகி தான் பிறர்போற் கூறினும் இவை அவனுக்கு இல்லையென்று அறிவித்தவாறு காண்க.

தன்னைத்தான் உள்ளபடி அறிவது எங்ஙனம் எனின், மேற் கூறுகின்றார்.